கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் எம்.பி மஹுவா மொய்த்ரா. தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, வரும் 31-ம்தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெறிமுறைக்குழு அதிகாரபூர்வமாக தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளியிட்டதை காரணம் காட்டி, வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால் விசாரணை தேதி தள்ளி வைக்கப்பட்டது.
மேலும், தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4-ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். இந்த நிலையில், கேள்விக்கு பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மேலும் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.