இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூன்று வாரங்களாகத் தொடரும் நிலையில், ஐநா சபையின் 10வது அவசரக்கால சிறப்பு அமர்வு தொடங்கியது. ஐநா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோர்டன் சார்பில் வரை தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதில் காசா மீதான போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும் என்று ஜோர்டன் வலியுறுத்தியது. அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் காசா பகுதியில் மோதலில் தொடரும் நிலையில், உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதே தீர்மானத்தின் சாரம்சம். காசா பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்குத் தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அடிப்படை விஷயங்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 193 நாடுகளைக் கொண்ட ஐநா சபையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 45 நாட்கள் வாக்களிக்காமல் மவுனம் காத்தன.

இஸ்ரேல் ஹமாஸ் விவகாரத்தில் ஏன் வாக்களிக்கவில்லை என்பது குறித்தும் இந்தியா விளக்கியுள்ளது. இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பெயரைக் கூட குறிப்பிடப்படவில்லை என்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்ற செய்தி சென்று சேர்வதை ஐநா உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இது குறித்து ஐநா சபைக்கான இந்தியாவின் பிரதிநிதி யோஜ்னா படேல் கூறுகையில், “இந்தச் சபையின் விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான தெளிவான செய்தியை அனுப்பும் என்று நம்புகிறோம். மேலும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பிணையக் கைதிகளின் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பயங்கரவாதம் எப்போதும் ஒரு கொடூரமானது. பயங்கரவாதத்திற்கு எல்லை, தேசியம் அல்லது இனம் இல்லை.. பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த வேண்டாம். வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு.. பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சகிப்புத்தன்மை இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கே நிலவி வரும் சூழல் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் பகையை அதிகரிப்பது சிக்கலை அதிகப்படுத்தும். எனவே இங்கே அனைத்து தரப்பினரும் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் மோசமான தாக்குதலை நடத்திய நிலையில், இந்த தீர்மானத்தில் ஹமாஸ் என்று ஒரு வார்த்தை கூட இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு விவகாரத்தில் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார் . வன்முறையைத் தவிர்க்க நேரடியான சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.