நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும்: செல்லூர் ராஜூ

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும். தேர்தல் முடிந்துவிட்டால் எல்லோருக்கும் ‘ஸ்வாஹா’ போட்டு விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 52 ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும், 2 கோடியே 20 லட்சம் பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். சொன்னபடி அனைவருக்கும் கொடுத்தார்களா? எல்லோருக்கும் பணம் வந்துச்சா? அங்க பாரப்பா.. அங்க பாரு.. அவங்களுக்கெல்லாம் கொடுக்கல. ஏமாத்திப் புட்டாய்ங்களே.. இத மட்டுமா செஞ்சாய்ங்க.. கேஸ் சிலிண்ட மானியம் வந்துச்சா? அதுவும் வரல? மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றார்கள். ஏன்ப்பா, நீங்க வாங்கின கடனை எல்லாம் ரத்து பண்ணிட்டாங்களா? பண்ணல, சொன்னதை செய்யல. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செஞ்சாங்களா? எப்படி நீட் தேர்வை ரத்து செய்வது என்று எங்க அப்பாவுக்குத் தான் தெரியும் என்றார் தீராத விளையாட்டுப் பிள்ளை நம்ம விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. வந்தவுடனே முதல் கையெழுத்து என்றார். நீட் தேர்வை ரத்து செய்துவிட்டார்களா? இவங்களை நம்பி, நீட் தேர்வு இல்லை என்று நம்பி மாணவச் செல்வங்கள் நீட் தேர்வுக்கு படிக்காமல் இருந்து ஏமாந்துவிட்டார்கள். பாவிப் பயக, அனிதா மரணம் என்ற ஒன்றை வைத்து என்ன ஆட்டம் ஆடினார்கள்? 20 மாதத்தில் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள். இன்று நீட் தேர்வை ரத்து செய்ய நீங்க வாங்க, நாங்க வாங்க என கையெழுத்து வாங்குகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரைக்கும் தான் பெண்களுக்கு 1000 பணம் வரும். தேர்தல் முடிந்துவிட்டால் எல்லோருக்கும் ‘ஸ்வாஹா’ போட்டு விடுவார்கள். அரசிடம் நிதி இல்லை என்று ஊத்தி மூடி விடுவார்கள். பொய்யாகச் சொல்லி இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கட்சி ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறே கிடையாது. கருணாநிதி என்னென்னமோ நாடகம் போட்டே மக்கள் நம்பவில்லை.

போனா போகுதுனு தூக்கி வச்சி கொண்டாடினா, நம்ம காதை கடிக்கிறாய்ங்க.. ஏம்மா காதை கடிச்சா விடலாமா தங்கச்சி? நம்மளே பாவம் போனாப் போகுதுனு சுமந்துக்கிட்டு இருந்தோம். அவங்களால நம்ம ஆட்சியும் போச்சு. 2 லட்சம் ஓட்டு மட்டும் கூட வாங்கி இருந்தா இன்றைக்கு எடப்பாடியார் ஆட்சியில் இருந்திருப்பார். எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவார். இன்றைக்கு அவங்க 1000 ரூபாய் கொடுக்க மறுக்கிறார்கள். எடப்பாடியார் வந்து 2000 ரூபாய் கொடுப்பார். அன்றைய நிலைக்கு 5000 ரூபாய் கொடுத்தாலும் கொடுப்பார். அப்படிப்பட்ட நல்ல மனசுக்காரர் எடப்பாடியார். இவ்வாறு அவர் பேசினார்.