கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென நடந்த வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில மாநில டிஜிபி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள களமச்சேரியில் இன்று பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 2,000 பேர் ஒன்று கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென காலை வெடிச் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து பிரார்த்தனை கூட்டத்தில் தீ பற்றியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். அங்கிருந்தவர்களுக்கு முதலில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்தா இல்லை திட்டமிட்டு நடந்த தப்பட்ட தாக்குதலா என்று முதலில் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையே இது குறித்து கேரளா மாநில டிஜிபி விளக்கமளித்துள்ளார். கேரளாவில் நிகழ்ந்ததுக் குண்டு வெடிப்புதான் என்று கூறிய அவர், ஐஇடி வெடிமருந்து மூலம் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளதாகவும் கேரளா குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெறுப்பு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.