தேனி மாவட்டம் கூடலூரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடச் சென்றவர் தங்களை அரிவாளால் வெட்ட முயன்றதாக வனத்துறை தரப்பு கூறும் நிலையில், உறவினர்கள் குற்றச்சாட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டியை சேர்ந்த சிலர் கூடலூர் வெட்டுக்காடு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களை வழிமறித்த வனத்துறையினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈஸ்வரன் என்பவருக்கும், கூடலூர் வனத்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. வேட்டையாட வந்த ஈஸ்வரன் அரிவாளால் வனத்துறையினரை தாக்க முயன்றதால், வனத்துறையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், குண்டு பாய்ந்து ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஈஸ்வரனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் வயலில் காவலுக்குச் சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும், வேட்டைக்குச் சென்றதால் சுட்டுக் கொன்றதாக பொய் சொல்வதாகவும் ஈஸ்வரனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழந்த ஈஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.