கேரள குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று (திங்கள்கிழமை) காலை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் இறந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். மேலும் மார்ட்டின் மருத்துவப் பரிசோதனைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாாரக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த குண்டுவெடிப்பு வழக்கை 20 பேர் கொண்ட குழு விசாரிக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். அதோடு இந்த வழக்கில் எஃப்ஐஆர்-ம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளூர் போலீஸாருக்கு உதவ, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) குழுக்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.