ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீஸார் மடக்கி பிடித்த போது அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால் பெட்ரோல் குண்டை வீசியதாக வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருக்கா வினோத் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையில் ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத், அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. எனவே கருக்கா வினோத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் என்ன தொடர்பு? பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார், அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார் போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருக்கா வினோத் இன்றைய தினம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புழல் சிறையிலிருந்து இன்று அழைத்து வரப்பட்டார். அப்போது பலத்த பாதுகாப்புடன் வந்த அவர் போலீஸ் வேனில் இருந்து இறங்கியதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள குற்றவாளிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என முழக்கமிட்டார். மேலும் ஆளுநர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசியது நான்தான் என தெரிவித்தார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தின் உள்ளே அழைத்து செல்லப்படுகிறார். மேலும் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுப்பது யார், அவருடைய பின்புலத்தில் இருப்பது யார், அவருக்கான அரசியல் தொடர்பு என்ன உள்ளிட்டவை குறித்து விசாரிக்க கருக்கா வினோத்தை காவல் துறை 3 நாட்கள் காவலில் எடுக்க பொறுப்பு நீதிபதி சந்தோஷிடம் கேட்டனர். அப்போது கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தார் நீதிபதி.