டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைபவ் கெலாட் ஆஜர்!

அந்நியச் செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணக்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.

வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு கடந்த வியாழக்கிழமை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது அவர் டெல்லி அல்லது ஜெய்ப்பூர் இரண்டு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஆஜராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக வைபவ் கெலாட் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இன்று முற்பகல் 11.30 மணிக்கு வந்தார்.

சமீபத்தில் ராஜஸ்தானை அடிப்படையாகக் கொண்ட ட்ரைட்டன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் பி.லிமிட், வர்தா எண்டர்பிரைசஸ் பி.லிமிட் மற்றும் அதன் இயக்குநர்கள், பிரோமோட்டர்கள் ஷிவ் சங்கர் சர்மா, ரத்தன் காந்த் சர்மா உள்ளிட்டோர் இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த மாத சோதனைகளின் போது ரூ.1.2 கோடி அமலாக்கத் துறை பறிமுதல் செய்திருந்தது. கடந்த 2007 – 08 ஆண்டுகளில் ட்ரைட்டன் நிறுவனத்தின் மீது மொரீசியஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிலிருந்து முறைகேடாக முதலீடு பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விசாரணையில் வைபவ் கெலாட்டிடம் அவருக்கு ரத்தன் காந்த் சர்மாவுடன் இருந்த தொடர்பு பற்றி விசாரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தனது மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “வைபவுக்கு அந்நியச் செலாவணி பரிவர்த்தனை எதுவும் கிடையாது. அவர் ஒரு வாடகைக்கார் நிறுவனம் வைத்துள்ளார். ரத்தன் காந்த் சர்மா அதில் ஒரு பங்குதாரராக இருந்தார். இப்போது இருவகும் தனித்தனியாக தொழில் செய்கின்றனர்” என்றார்.