வெடிகுண்டு வைப்போரை பாதுகாக்கிற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் இன்று வரை ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகை சர்தார் பட்டேல் சாலையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தற்போது வரை சர்ச்சையும் விமர்சனங்களும் நீடிக்கிறது. தமிழ்நாட்டு ஆளுநருக்கு எதிராக அனைத்து திமுக கூட்டணி கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தும் போராட்டங்களை நடத்தியும் இருக்கின்றன. ஏற்கனவே தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பார். தமிழ்நாட்டில் தாம் அரசியல் பேசுவதில் தவறில்லை என்பது தமிழிசை சவுந்தரராஜன் வாதம். இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருப்பவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
பரமக்குடியில் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கேரளமும் தமிழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல்வேறு கட்டங்களிலே ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆபத்தை சந்தித்திருக்கிறது. பல இன்னுயிர்களை இழந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக இரு மாநில அரசுகளும் (தமிழ்நாடு, கேரளா) பயங்கரவாதிகளை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது போன்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். அங்கே இருக்கின்ற கம்யூனிஸ்ட் அரசாங்கமாக இருக்கட்டும் இங்கே ஸ்டாலின் தலைமையில் இருக்கிற திமுக அரசாங்கமாக இருக்கட்டும்.. வெடிகுண்டுகளை வைப்பவர்களையும் கொலைகாரர்களையும் பாதுகாக்கின்றன அரசாங்கமாக இருக்கின்றன. இதனால்தான் இந்த வன்முறையை நம்மால் அடக்க இயலவில்லை.
முக்கியமாக ஒரு கிறிஸ்தவர், தம்முடைய கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்திருப்பார் என்பது யாருக்குமே நம்பிக்கை இல்லாதது. கேரளா அரசு முனைப்போடு செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது என்.ஐ.ஏ. தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதுதான் இந்த பேராபத்தை தடுக்க உதவும். இவ்வாறு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.