அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம்?: அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு!

பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைப்பதை தடுக்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான இவர், பாஜகவை விமர்சிப்பது எந்த அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் மிக கடுமையாக பதிலடி கொடுக்கக்கூடியவர். அண்ணாமலைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையாக எதிர்க்கக்கூடியவர். இந்நிலையில் அண்மையில் சென்னை அருகே பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிகம்பத்தை அகற்றியதை எதிர்த்த போராட்டத்தில் அமர் பிரசாத் ரெட்டியும் கலந்து கொண்டார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி அதில் பிரதமர் மோடி படத்தை ஒட்டியதாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கு அமர் பிரசாத் ரெட்டி மீது பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும் தூசு தட்டப்பட்டு அதிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதனிடையே ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளதால் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறைதிட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட தன் கணவர் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், தனது கணவர் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிரோஷா குற்றம்சாட்டி உள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.