மோடி பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார்: மு.க.ஸ்டாலின்!

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார் என முதலமைச்ச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற முழக்கத்துடன் முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள ஆடியோவில் பழைய மோடிக்கும், புதிய மோடிக்கும் உள்ள வேறுபாடுகளை லிஸ்ட் போட்டுள்ளார். இது குறித்த முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமராகி டெல்லிக்கு வந்ததற்கு பின்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்ன என்றால், “India, that is Bharat, shall be a Union of States!”. முதலமைச்சராக மாநில உரிமைகளைப் பேசியவர், இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால், முனிசிபாலிட்டிகளாக மாற்றிட வேண்டும் என்று நினைக்கிறது. மோடி முதலமைச்சராக இருந்த வரை பேசியதற்கும், பிரதமர் ஆனதும் செய்வதற்கும் இருக்கும் வேறுபாட்டிற்கு, சில எடுத்துக்காட்டுகளை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

* டெல்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்படும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுக் கருத்து தெரிவிக்கும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத ‘நிதி ஆயோக்’ அமைப்பை உருவாக்கினார்.

* மாற்றுக்கட்சி ஆட்சிகளைப் பழிவாங்கமாட்டேன் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. என்ன செய்கிறது? எங்கு எல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியவில்லையோ, அங்கு இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள். முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார்.

* “கூட்டாட்சிக் கருத்தியலை ஆதரிப்பவன் நான். டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றுவேன்” என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்றால், மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றக்கூட, ஒன்றியை அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

* மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய்வோம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

* கூடுதலாகப் பிரதமர், மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார்.. ஆனால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். மாநிலங்களின் பங்கையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜி.எஸ்.டி.யால் இப்போது ஐ.சி.யூ-வில் இருக்கிறது! 12-ஆவது நிதி கமிஷனில் இருந்து நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டதனால், கடந்த 19 ஆண்டுகளில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இனிமே ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படப் போகிறது.

அதேமாதிரி, கிராமப்புற ஏழை – எளிய தாய்மார்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்ல, வேலை செய்யும் தாய்மார்களுக்குச் சம்பளம் கூட ஒழுங்காகக் கொடுக்காமல் பா.ஜ.க. ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள். இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு மட்டும் என்று நினைக்காதீர்கள். இதை கேட்டுக்கொண்டு இருக்கும் உங்கள் எல்லோரின் மாநிலத்திலும் இதே தான் நிலைமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.