அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முழக்கங்களை எழுப்பியது அருவறுக்கத்தக்கது,அநாகரீகமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பசும்பொன் தேவர் குருபூஜையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்திலும் செல்லும் வழியிலும் பல இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எடப்பாடி பழனிசாமியே திரும்பி போ! ஒழிக! என்கிற கோஷங்கள் எழுப்பப்பட்டன. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த போது வன்னியருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். இது முக்குலத்தோர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு செய்த துரோகம் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த செயல் அருவறுக்கத்தக்கது. ரொம்ப அநாகரீகமானது. அவரு மேல உங்களுக்கு வெறுப்பு இருந்தால், வேறு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பொதுக் கூட்டம் பேசும் போதும் வாக்கு சேகரிக்கும் போதும் வைத்து கொள்ளலாம். இது எங்க அய்யாவின் புனித இடம். அந்த இடத்தில் இப்படி செய்வது என்பது முத்துராமலிங்க தேவரையே அவமதிப்பது போன்றது. எங்க தாத்தா முத்துராமலிங்க தேவரையே அவமதிப்பதாகும். நான் எல்லாம் ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த இடம் அதற்கு ஏற்புடையது அல்ல. வழிபட வந்துள்ளார்.. அவருக்கும் உரிமை உண்டு. உங்களுக்கும் உரிமை இருக்கு. நீங்க வழிபட்டுவிட்டு அவரைப் போக விடவேண்டும். உங்க ஊரில் வாக்கு கேட்க வரும் போது வெளியே போங்க, வராதீங்கன்னு சொல்லலாம். அதுவேற. அந்த இடத்தில் அதை செய்யக் கூடாது.. வெறுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.