நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 53 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு மீது சிஐடி போலீசார் 5வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை ஆட்சியின்போது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தில் நிதி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபாபுவை கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சந்திரபாபுவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஜாமீன் வழங்க அவரது குடும்பத்தினர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணை நடத்திய ஆந்திர உயர் நீதிமன்றம் சந்திரபாபுவை நவம்பர் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் சந்திரபாபுவுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது. அதில், ஜாமீனில் செல்வதால் சந்திரபாபு பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என ஆந்திர உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் சந்திரபாபு நேற்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே நடிகரும் சந்திரபாவுவின் சம்மந்தியுமான பாலகிருஷ்ணா, மருமகள் பிராமிணி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது சந்திரபாபு தனது பேரன் தேவான்ஸை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொஞ்சி மகிழ்ந்தார். சந்திரபாபு 53 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் வெளி வந்ததால் தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில் சிஐடி போலீசாரால் நேற்று முன்தினம் சந்திரபாபு மீது 5வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 2014-2019ம் ஆண்டுகளில் சந்திரபாபு முதல்வராக இருந்தபோது, மதுபான கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார். தற்போது மாநிலத்தில் உள்ள 20 மதுபான ஆலைகளில் 14 மதுபான ஆலைகளுக்கு சந்திரபாபு அனுமதி வழங்கியுள்ளார். அந்த அனுமதி சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது எனவும், இதில் சந்திரபாபு ஏ3 குற்றவாளியாக உள்ளதாகவும் கூறி ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது 45 ஆண்டுகால அரசியலில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இனியும் செய்யமாட்டேன், செய்யவும் விடமாட்டேன். நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஆதரவளித்து நான் வெளியே வருவதற்காக பலர் பிரார்த்தனை செய்தும், எனக்காக குரல் கொடுத்து போராடிய அனைவருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்றார்.