டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருநாள் பயணமாக இது அமையும் என பாஜக மற்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பாம்பன் ரயில்பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி இருந்தார். இந்த பாலத்தை அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக அர்பணிக்க உள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுளத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணிகள் குறித்தும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என எதிர்பாக்கப்படுகிறது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வெளியாகி வரும் நிலையில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி உள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இந்த நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது உறுதியாகி உள்ளது.