எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி செய்திருக்கலாம்: பியூஷ் கோயல்

“எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் செய்தி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களின் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதிகாரபூர்வமாக புகாரளிக்க வேண்டும், அதனடிப்படையில் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான், அவர்கள் எல்லாவற்றிலும் சதி நடப்பதாகவே பார்க்கிறார்கள்.

இது ஒருவித செயலிழப்பு எச்சரிக்கை நடவடிக்கைதான் என்று ஆப்பிள் நிறுவனமே தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செய்தி 150 நாடுகளிலுள்ள மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. ஹேக்கர்களும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆப்பிள் நிறுவனமும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அவர்களின் நிலை நாட்டுக்குத் தெரியும். உட்கட்சிப்பூசல்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், “நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களில் நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை பெற்றுள்ளனர். ஏன் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும்? எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்களில் ஊடுருவ யாருக்கு அதிக ஆர்வம் இருக்க முடியும்? பெகாசஸ் மர்மத்துக்கு பின்னர் (இப்போது வரை அது தீர்க்கப்படவில்லை) சந்தேகத்தின் விரல்கள் ஓர் அரசு நிறுவனத்தை சுட்டிக்காட்டுகின்றன. இப்போது வரை அது ஒரு சந்தேகம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, கடந்த 2011- ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி தனது அவலுவலகத்தில் குளறுபடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்த ஒரு செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அப்பதிவில் மாளவியா, “நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது அப்போதைய நிதியமைச்சர் அலுவலகத்தில் குளறுபடி நடந்துள்ளது. அதுவும் எச்சரிக்கையா ப.சிதம்பரம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமித் மாளவியா குறிப்பிட்டுள்ள செய்தியில், தனது அலுவலகத்தில் மின்னணு சாதனங்களைப் பொருத்தப் பயன்படுத்தக்கூடிய பிசின் போன்ற ஒரு பொருள் கைப்பற்றப்பட்டதாக பிரனாப் முகர்ஜி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.