மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் முனைவர் பட்டத்தை வாங்க மாட்டோம் என இரண்டு பேராசிரியர்கள் புறக்கணித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அதை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். அதையும் ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை, இணை வேந்தர் என்ற முறையில் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்தார்.
மதுரை வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்கள் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ் குமார் ஆகியோர் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா. சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.