திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி கொடுத்த அண்ணாமலை!

கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடரலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் திருச்சி சூர்யா சிவா 6 மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.