நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நடிகர் விஜய் நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் லியோ படத்தில் நடித்த பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், மக்கள்தான் மன்னர்கள், உங்களுக்கு சேவை செய்யும் தளபதிதான் நான். மக்கள் ஆணையிட்டால் செய்து முடிக்கிறேன் என்றார். விஜய்யின் பேச்சு கூடுதலான ‘அரசியல்’ டச்சுடன் இருந்தது. 2026 தேர்தலின்போது விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அது பற்றி லியோ வெற்றி விழாவில் விஜய்யிடமே கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘கப்பு முக்கியம் பிகிலு’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தனது அரசியல் வருகையை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளதாகவும், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “அரசியல் களத்திற்கு வரும் ஒவ்வொருவரின் நோக்கமும் வெல்ல வேண்டும் என்பதுதான். வெற்றி பெற வேண்டும், அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது. தம்பி விஜய்யின் அந்த கனவு வெல்வதற்கு வாழ்த்துவோம்.
ஒருவர் முதுகுக்குப் பின்பாக நாம் செய்ய வேண்டியது தட்டிக் கொடுப்பது தான். விஜய் எடுத்து வைக்கும் கொள்கைகளை மக்கள் ஏற்க வேண்டும். அரசியல் கட்சி தொடங்கியதுமே அதிகாரத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. எம்ஜிஆர், என்டிஆரை பார்த்து எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் வந்தது விபத்து. விபத்து ஒருபோதும் விதியாகாது. எம்ஜிஆர் கட்சியை கட்டமைத்து வைத்திருந்ததால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார். எம்ஜிஆரே கட்சித் தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு, நடத்திப் பார்ப்போம் என கட்சி தொடங்கிவிட்டார். எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் தொடங்கினார். ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் முடியவில்லை. விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால் தனித்து நிற்காமல் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் சரிந்துவிட்டது. நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது. கட்சி தொடங்கியதுமே உடனே அதிகாரத்துக்கு வர முடியாது. கட்சி தொடங்கிய உடனே வெற்றி பெற்றால் அது பெரும் புரட்சி தான். ஆனால், அப்படியான நிலை இப்போது உள்ளதா என்பதை யோசிக்க வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல நான் வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் பேச முடியாது” எனத் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் ஆதரிப்பீர்களா? எதிர்ப்பீர்களா? என்ற கேள்விக்கு, “நடிகர் விஜய் நிலைப்பாட்டை எடுக்கும்போது பேச வேண்டும். அவர் என்ன கொள்கையை எடுத்து வைக்கிறார் என்று தெரியாமல் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார். விஜய் நீங்கள் நினைப்பது போல் இல்லை, அவர் வரும்போது சரியான முடிவை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார் சீமான்.