யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்: ஜெயக்குமார்

“யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து வருக்கிறார். நேற்று நடந்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் சந்தித்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். 2026 தேர்தலின்போது விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அது பற்றி லியோ வெற்றி விழாவில் விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘கப்பு முக்கியம் பிகிலு’ எனக் கூறி இருக்கிறார். தனது அரசியல் வருகையையே அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவும், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திடம் பேசியுள்ளார். அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் கட்சி ஆரம்பிக்க உரிமை உண்டு. அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருக்கும். விஜய் தனது கருத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ தெரிவித்துள்ளார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். கட்சி தொடங்குவது பெரிதல்ல, மக்கள் செல்வாக்கை பெறுவதே முக்கியம். மக்கள் தான் தீர்ப்பளிக்கப் போகிறார்கள். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். எம்.ஜி.ஆர் என்பவர் ஒரு சகாப்தம் யாரும் – எவரும் அவருக்கு இணையாக முடியாது. 31 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

மேலும், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவர் அதிமுகவிற்கு அச்சுறுத்தலாக இருப்பாரா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, “அப்படியெல்லாம் இருக்கப் போவதில்லை. அதிமுகவிற்கு விஜய் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாக்குகளை யாரும் கை வைக்க முடியாது” என்றார் ஜெயக்குமார்.