வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாராயணன் திருப்பதி பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்றார்.
திமுகவின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். முதல்வர் தனது உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் கூறுகையில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியே கூட வருவது இல்லை” என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
வருமான வரித்துறை – அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்? அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்? : முதல்வர் மு.க.ஸ்டாலின். (பேச்சை படித்தது உதயநிதி ஸ்டாலின்)
1. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்பது மட்டுமே உலகறிந்த ரகசியம். ஊழல் புரிந்தவர், மோசடி செய்தவர் என்று நீங்கள் (தி மு க) குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி அழகு பார்த்த நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாமா?
2. உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சராலேயே அலுவலகத்தை விட்டு ஊழல் வெளியே வந்தது(பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்) என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
3. தவறு. அது 1% அல்ல, 25% . விஞ்ஞான ஊழலை முன்னெடுப்பவர்கள் விரைவில் அகப்படுவார்கள்” என்று பதிவிட்டுள்ளர்.