ரஞ்சனா நாச்சியார் சட்டத்தை கையில் எடுத்தது தவறு தான்: அண்ணாமலை

அரசு பேருந்து படியில் பயணித்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் தாக்கியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர் சட்டத்தை கையில் எடுத்தது தவறு தான் என்று கூறினார்.

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் மாநகர அரசுப் பேருந்து ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தினார். பின்னர் டிரைவரிடம் இப்படி மாணவர்கள் தொங்குகிறார்களே, அவர்களை செருப்பால் அடித்து உள்ளே போகவைத்திருக்க வேண்டாமா என்று கேட்டார். பின்னர் படியில் தொங்கிய மாணவர்களை சரமாரியாகத் திட்டினார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த ரஞ்சனா நாச்சியார், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களை நடுரோட்டில் இழுத்து வைத்து கண்ணத்தில் மாறி மாறி தாக்கினார். அத்துடன் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய துணை நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயலை பலரும் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் பலர் வைத்தனர்.

இந்நிலையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியார் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சனா நாச்சியார், மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்கள் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே பாஜக தலைவர்கள் பலரும் ரஞ்சனா நாச்சியாருக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்த நிலையில், முதல் முறையாக இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:-

சட்டத்தை நாம் கையில் எடுக்கக்கூடாது.. காவல்துறைக்கு தான் அடிக்க அனுமதி உள்ளது. காவல்துறைக்கு உள்ள ஸ்பெசல் பவர் அது.. அவர்கள் சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்காக அவர்கள் லத்தி சார்ஜ் முதல் அடிக்கலாம்.. அதேநேரம் சாமானிய மனிதன் வெகுண்டெழுந்து, அவர் சொல்லியும் கேட்கவில்லை.. போக்குவரத்து துறையும் கேட்கவில்லை.. பஸ் டிரைவரும் கேட்கவில்லை.. ஜாலியாக ஓட்டிக்கொண்டு போகிறார். எத்தனை பேர் தொங்குறாங்க.. அவங்க கீழ விழுந்தா என்ன, அடுத்து வர்ற லாரி அவங்க மேலே ஏறுனா என்ன.. கண்டக்டரும் கேள்வி கேட்கல.. அவரும் உள்ள இருக்காரு.. இந்த காலக்கட்டத்தில் யார் கேள்வி கேட்பாங்க.. நான் தெரியாமல் கேட்கிறேன்..ஒரு சாமானிய மனிதன் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்.. அதனால் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சகோதரி ரஞ்சனா நாச்சியார் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை நாம் விவாதிக்கலாம். நீங்க ஆக்ரோஷமாக பேசியிருக்கக்கூடாது. அந்த மாணவர்களை அடித்திருக்கக்கூடாது.. என்று சொல்லலாம். ஆனால் கேள்வி கேட்டது தவறு என்று சொல்ல மாட்டேன்..

தினமும் நாம் பார்க்கிறோம்.. பஸ்ஸில் இருந்து இரண்டு பேர் தவறி விழுறாங்க.. ஸ்கூல் பேக் இருக்கிறதால் தப்பித்துக் கொள்கிறார்கள். நானே இரண்டு மூன்று வீடியோ பார்த்திருக்கிறேன். நம்முடைய பேருந்து படிக்கெட்டு பிய்ந்து விழுகிறது.அப்படிப்பட்ட படிக்கெட்டில் 15 பேரை நிற்க வைக்கிறார்கள்.. எப்ப இடிஞ்சு விழுந்து சில பேர் இறந்தா மட்டும் தான் போக்குவரத்து துறை கண் விழிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. அதனால் ரஞ்சனா செய்ததை முழுமையும் சரி என்று நான் சொல்ல மாட்டேன்.. சமூக அக்கறையில் வெகுண்டெழுந்து கோபம் வந்து செஞ்சுருக்காங்க.. அதைத்தான் நீதிபதியும் பார்த்திருக்காங்க.. ஸ்ரீபெரும்புதூர் கோர்டில் நீதிபதியும் சொல்லி பெயில் கொடுத்திருக்காங்க.. காவல்துறை என்ன பண்ணுணாங்க.. 7 செக்சனில் வழக்கு போட்டு, காலையிலேயே தீவிரவாதி போல் கைது பண்ணியிருக்காங்க. காவல்துறையின் மாண்பு திமுக ஆட்சியில் குலைந்து கொண்டிருக்கிறது.. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.