ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு நவ.15க்குள் அனுமதி அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி கோரி இருந்தது. தமிழக காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி அளித்தது. நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாததால் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார்.

காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். தனி நீதிபதி தீர்ப்பில் தவறு இருந்தால் டிவிசன் அமர்வுதான் சரிசெய்யவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிடவேண்டும் என தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் அமர்வு விசாரணையை இன்று திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரோஸ்டர் அட்டவணையை பார்த்த பின்னர்தான் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கை கருதினால் மாநில அரசே தேதிகளை தேர்வு செய்யலாமே என்று தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு பேரணிக்கு தேதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 22 முதல் 29 வரை தமிழ்நாட்டில் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளதாக கூறிய தமிழக அரசு பேரணி நடைபெறும் வழிகளில்தான் பிரச்சினை என தெரிவித்தது. மாவட்டத்திற்கு ஒரு பேரணி என குறித்த தேதியில் குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட், விசிக பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 என இரு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும் என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கேட்டுள்ள தேதிகளில் வேறு சில மத விழாக்கள் நடைபெற இருந்ததால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது என்றும், பேரணி செல்லும் பாதையை மாநில அரசு தீர்மானிக்க முடியும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.