டான்டி தொழிலாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

டான்டி (TANTEA) தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கும், பல்வேறு பொதுத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே ரூ.29.38 கோடியினை வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில், 1,093 பணியாளர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, பணி ஓய்விற்குப் பிறகும் தங்களுடைய குடியிருப்புகளை காலி செய்யாத தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் ரூ.14 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்க முடிவு செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மேற்காணும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஏதுவாக, முதல்வர் குடியிருப்புகளின் பயனாளிகள் பங்களிப்பாக ரூ.13.46 கோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இவற்றின் வாயிலாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் புலனாகும்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு தாங்கள் பெற்றுவரும் தினக்கூலி ரூ.375/-ஐ, திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியை நடைமுறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, நாளொன்றுக்கு ரூ.438/- ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், 3-11-2023 அன்று தங்களைச் சந்தித்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் இந்தக் கோரிக்கையையும், நீண்டகாலமாக உள்ள இதர கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் மேற்படி கோரிக்கைகளை முதல்வர் பரிசீலித்து, நிறைவேற்றிட வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த முதல்வர், தனியார் தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ. 438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும். அதோடு, தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் (TANTEA) பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலை கவனத்திற்கு வந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தேயிலைத் தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.