மத்திய அரசு வரி பங்கீடு: தமிழகத்துக்கு 29 பைசா, உ.பிக்கு 2 ரூபாவா?: சு.வெங்கடேசன்!

நவம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976.10 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியுடன் இதனை ஒப்பிட்டு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்குமான வரி பகிர்வை நேற்று மத்திய அரசு ஒதுக்கியது. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு மட்டும் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல குறைந்தபட்சமாக கோவாவுக்கு ரூ.281.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களுக்கும், பாஜக அல்லாத மாநிலங்களுக்கும் வழக்கம் போல குறைவாகவே வருமான வரி பகிரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்த அளவில் ரூ.2,976.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாம் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கிறோம் எனில் திருப்பி நமக்கு 29 பைசா மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசுக்கான வரியை செலுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும்போதே இந்த நிலைமை ஏற்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதே உத்தரப் பிரதேசம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் கட்சியின் முக்கிய பிரச்னையாக எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், “மாநிலங்களுக்கான வரி பங்கீட்டில் 5 தென்னிந்திய மாநிலங்களுக்கும் சேர்த்து 11,527.86 கோடி விடுவித்துள்ள ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் 13,088.51 கோடி விடுவித்துள்ளது ஏன்? இந்த விகிதாச்சாரத்திற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.