தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்திற்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பான சட்டப் போராட்டங்களையும் திமுக அரசு எதிர்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஆதி சிவாச்சாரியார்கள் அமைப்பு, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாட்டில் ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது ஆதி சிவாச்சாரியார்களின் வழக்கு.

இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, ஆகம விதிகளை படித்து பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனங்களுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது ஏன் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்? தமிழ்நாட்டில் அர்ச்சகர்கள் நியமனத்தில் தற்போதைய நிலைமையே தொடரும் என கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.