கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் மது குடிக்க பணம் தராததால் முதலாம் ஆண்டு மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிரபல பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க கூடிய முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி அதே கல்லூரியில் விடுதியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்களும் சேர்ந்து முதலமாண்டு மாணவருக்கு டிரிம்மரை வைத்து மொட்டை அடித்து, நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மாணவரின் பெற்றோருக்கு தெரிய வரவே காவல்துறையில் அளித்த புகார் அளித்தனர். அதன் பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த மாணவர்கள் மீது ராக்கிங், ஆத்திர மூட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்சனை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் ராக்கிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்களையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.