மக்களவை நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமையடைவதாக எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு வியாழக்கிழமை பரிந்துரைத்த நிலையில், இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக நெறிமுறைகளற்ற முறையில், மக்களவை நெறிமுறைக் குழுவால் வெளியேற்றப்பபடும் முதல் நபர் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். முதலில் அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்குமாறு சிபிஐயிடம் கூறும்படி அரசிடம் கேட்பார்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை கங்காரு நீதிமன்றம். குரங்கு வியாபாரம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “ஒரு நல்ல பிரச்சினையை வீணாக்காதீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எனது 2024 மக்களவைத் தேர்தல் வெற்றியை இரட்டிப்பாக்கும்” என்று தெரிவித்துள்ளார். பின்னர் இந்தப் பதிவை மொய்த்ரா நீக்கியதாக தெரிகிறது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்களை மஹுவா பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில்,விசாரணை நடத்த மக்களவை நெறிமுறை குழுவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். நெறிமுறை குழு முன்பு மஹுவா மொய்த்ரா கடந்த 2-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நெறிமுறை குழு உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் 500 பக்க அறிக்கை வழங்கப்பட்டது. அதில், “நாடாளுமன்ற இணையதளத்தில், தனது சார்பில் கேள்விகளை கேட்க ஒரு வெளிநாட்டு தொழிலதிபரை (நண்பர்)அனுமதித்ததாக மொய்த்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நெறிமுறை குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடந்தது. இதில், மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யுமாறு மக்களவை தலைவருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வரைவு அறிக்கை மீது நடந்த வாக்கெடுப்புக்கு 6 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை அடிப்படையில், இந்த அறிக்கை ஏற்கப்பட்டது. மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் இந்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.