தமிழக அரசால் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல், தான் படித்த 4 கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். வீரமுத்துவேலின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகமே இந்தியாவை வியந்து பாராட்ட காரணமாக அமைந்து இருக்கும் சந்திரயான் 3 நிலவு பயண வெற்றியின் பின்னால் இருக்கும் விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவர் வீர முத்துவேல் என்ற தமிழர்தான். சந்திரயான் 3 நிலவை தொட்ட பின்னர் திட்ட இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலையே இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் அழைத்து பாராட்டினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும், சந்திரயான் 3 திட்டம் பெறும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ”சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். 4 வது நாடாக இந்தியாவை நிலாவில் தடம் பதிக்கும் வகையில் சந்திரயானை நிலைநிறுத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. மயில்சாமி அண்ணாதுரை, வனிதா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் 3 சந்திரயான் பயணங்களும் வழிநடத்தப்பட்டு உள்ளன. இவர்களின் அர்ப்பணிப்பும் அறிவும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. இவர்களின் அடிச்சுவடுகளை தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்க நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல், சந்திரயான் 3 திட்ட இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்புகொண்டு பேசி வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறப்பதாகவும், சந்திரயான்-3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 விஞ்ஞானிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தநிலையில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார். அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை வீரமுத்துவேல் சமமாக பகிர்ந்து அளித்துள்ளார். விஞ்ஞானி வீரமுத்துவேலுவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.