பஞ்சாப் மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது ‘நெருப்புடன் விளையாடுவதை’ போல என பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடைவிடாத மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். பஞ்சாப் மாநில சட்டசபையை கூட்ட விடாமல் முடக்குவது, பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்க்களை முடக்கி வைப்பது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இந்த செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்ததது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கடுமையாக சாடியது.
அத்துடன், ஆளுநர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொண்டிருக்கிறாரா? ஆளுநர் தமது செயல்பாட்டின் தீவிரத்தை புரிந்து கொண்டிருக்கிறாரா? ஆளுநரின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. ஒரு மாநில அரசு அனுப்புகிற கோப்புகளை எப்படி ஆளுநர் கிடப்பில் போட முடியும்? எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. அதேபோல, பஞ்சாப் மாநில அரசும் மாநில ஆளுநரும் செயல்படுகிற போக்குகள் மிகவும் கவலைக்குரியது; இருதரப்புமே அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றன எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் காட்டமாக தெரிவித்தது.