சித்திரை முதல் நாளுக்கு பதில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி முழங்கிய நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தை 1ஐயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சித்திரை 1ஐ அதாவது 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என தமிழக அரசின் விடுமுறை பட்டியலில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக திமுக அரசு ஏற்றுக்கொண்டதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையில் தை 1ஐ தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வைத்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல ‘தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை’யும் சட்டசபையில் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியமும், மதிமுக சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வப்பெருந்தகையும் (அப்போது விசிகவில் இருந்தார்) அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி ஆதரித்தனர்.
இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் பேசிய போது, “தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை’ ரத்து செய்யப்பட்டு விட்டது” என்றார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் 9-1-2015 அன்று நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று தான், பொங்கல் திருநாளை – தமிழ்ப் புத்தாண்டாக தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதாகும். இப்படி கருணாநிதியால் தை 1ஐ தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு 2006-2011 திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை’யும் கொண்டு வந்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் இன்றைய தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பெயரில் வெளியாகியுள்ள 2024ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை அறிவிப்பாணையில் 14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக அரசுக்கும், திமுகவினருக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருப்பதாக தெரிகிறது.