இணையவழி சூதாட்டத் தடைச் சட்டம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக பரிசீலித்து, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சியில் இன்று வெள்ளிக்கிழமை பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:-
இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு அரசு சட்டம் இயற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாகச் சொல்லி உள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார். நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இப்போது நீதிமன்றம், அரசு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இணையவழி சூதாட்டம் ஒழுங்குமுறைப்படுத்துதல் – தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்குப் பெயர். ஒழுங்குமுறைப்படுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான குழுக்கள் அமைத்து, ஒழுங்குபடுத்தி விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.
இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர் விளையாட்டுகளை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் அதில் ஏராளமான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனிப் பட்டியலில் அதைத் தந்துள்ளோம். நேரில் விளையாடும் ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ‘ப்ரோக்ராம்’. எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம். அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனைத் தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம்.
பாஜக கூறுபவற்றையெல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளை பாதுகாப்பதற்கும், அதை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பாஜகவிற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம்.
அண்ணாமலை தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை. ஒருவர் மீது பழியைச் சொல்லிவிட்டுப் போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள், அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்று அண்ணாமலை எண்ணுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.