10,12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று(நவ. 14) குழந்தைகள் தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வென்ற 180 மாணவ – மாணவியருக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:-
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதுகுறித்து கண்காணித்து வருகிறோம். மழை அதிகமுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறோம். இதனை ஈடுசெய்யும் பொருட்டு மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். ஏனெனில் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.
10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2-3 அட்டவணைகள் தயார் நிலையில் உள்ளன. நீட், ஜேஇஇ, கிளாட் உள்ளிட்ட மற்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக பரிசீலித்து பொதுத்தேர்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.