சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை நேரடியாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கண்காணித்து வருகிறார். இது ஒருபுறம் எனில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று கண்காணித்து வருகிறார்.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த மழை மாலை 4 மணி வரையிலும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. சென்னையில் மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது இயல்பு.. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். தண்ணீர் வெளியேற வழியில்லாத பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும். அதுபோல் தண்ணீர் தேங்கும் இடங்களை ஏற்கனவே அடையாளம் கண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுடன் சென்று பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர். சாலைகளில் எங்கெல்லாம் பள்ளம் அதிகமாக ஏற்படுகிறதோ, வார்டு வாரியாக கண்காணித்து, சாலைகளில் சல்லியை கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடந்தது. சென்னையில் மோசமான பள்ளம் ஏற்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பணிகள் நடந்தது.
முன்னதாக இன்று காலை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சியின் உயர் அதிகாரிகள், மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள், மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட சுரங்கப்பாதைகளை கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து களத்திற்கு சென்று ஒவ்வொரு பகுதியாக முன்னேற்பாடு பணிகளை கண்காணித்தனர். இராயப்பேட்டை ஜி.பி.சாலையில் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் பணியினை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதேபோல திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகள் விரைவாக செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழைநீர் சீராக வெளியேற்றும் பணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும், எங்கெல்லாம் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தனிகவனம் செலுத்தியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனிடையே திநகர் உள்பட சில இடங்களில் மரம் முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை என ஒவ்வொரு இடத்திலும் தீவிரமாக கண்காணித்து மழை நீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்தனர். சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த மையத்திற்கு வரும் அழைப்புகளை மேயர் பிரியா நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களின் தொலைப்பேசி அழைப்புகளுக்கு மேயர் பதில் அளித்து பேசினார்.. ஏராளமானோர் மாநகராட்சிக்கு அழைத்து குறைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் செல்ல வழிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆபத்தான பள்ளம் உள்ள சாலைகளில் சல்லி கற்களை கொட்டு சமப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நாளை 15.11.2023 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.