இஸ்ரேல் தாக்குதலில் 102 ஐநா பணியாளர்கள் உயிரிழப்பு!

ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேலிய ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

டாங்கிகளுடன் தங்களது வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்கு தங்களது தளவாடங்களை அமைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. ஐ.நா. நடத்தும் மருத்துவமனையில் நடத்தபட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்கள் மீது தக்குதல் நடத்தப்படுவது பண்ணாட்டு விதிகளை மீறும் செயல் என ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு கூறியுள்ளது. காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லபட்ட 102 ஐ.நா. பணியாளர்களுக்கு ஐ.நா. அவையில் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. பொது அவையில் உள்ள கொடி கம்பத்தில் ஐ.நா.வின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டு மரியாதை செலுத்தபட்டது.

காஸாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு உயிர்நீத்த ஐ.நா.பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று ஐ.நா.வின் பிற அலுவலகங்கள் முன்பும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் காஸா மீது அணுகுண்டு தாக்குதல் தொடர்பான இஸ்ரேல் அமைச்சரின் கருத்துக்கு சீனா, ஈரான் மற்றும் அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களை இந்தப் போரில் பயன்படுத்துவது தொடர்பான அவரது விருப்பம் இந்த உலகிற்கு ஆபத்தை அளிக்கக்கூடியது என மற்ற நாடுகள் தெரிவித்துள்ளன.

வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மாநாட்டின் தொடக்கம் கடந்த திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நாட்டுத் தூதர்களும், இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் கருத்துக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஐ.நா.வின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று அணு ஆயுதங்கள் இல்லாத மத்திய கிழக்கை உருவாக்குவது. காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என எலியாஹு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனே அவரது கருத்துக்களை நிராகரித்து, அவரை அனைத்து அமைச்சரவைக் கூட்டங்களிலிருந்தும் இடை நீக்கம் செய்திருந்தார்.

இஸ்ரேல் அமைச்சரின் இந்தக் கருந்து பெய்ஜிங்கிற்கு அதிர்ச்சியளிப்பதாக சீனாவின் துணைத் தூதரான கெங் சுவாங் தெரிவித்துள்ளார். இது மிகுந்தக் கவலையையும் மன உளைச்சலையும் தருவதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், இஸ்ரேல் அந்தக் கருத்தை உடனே திரும்பப்பெற்று அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைந்து அணு ஆயுதங்கள் அல்லாத நாடாக மாற வேண்டும் எனப் பரிந்துரைத்தார். மத்தியக் கிழக்கை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனாத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இப்போது இருக்கும் அபாயகரமான சூழலில் இதை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் திங்கள் கிழமையின் நான்காவது மாநாட்டைத் துவங்கி வைத்த ஐ.நா.வின் ஆயுதக் குறைப்புப் பிரிவின் தலைவர் இசுமி நகிமிட்சு, இஸ்ரேலைக் குறிப்பிடாமல், எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மத்தியக் கிழக்கை அணு ஆயுதம் மற்றும் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இல்லாத பகுதியாக உருவாக்குவது மிக முக்கியம் எனவும் வலியுறுத்தினார். மேலும் இரு மாநிலத் தீர்வின் அடிப்படையில் இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகளின் சார்பில் பேசிய ஓமன் நாட்டுத் தூதர் முகமது அல்-ஹசான், ‘அணு ஆயுதங்கள் பற்றி பரிசீலிக்கும் இஸ்ரேலின் போக்கு அப்பாவி மக்களின் மேல் அந்நாடு கொண்டுள்ள அலட்சியத்தைக் காட்டுகிறது. மேலும் பாலஸ்தீன மக்களிடம் அத்துமீறி ஆக்கிரமிக்கும் கொடூரத்தையும் இது உறுதியாக்குகிறது’ எனத் தெரிவித்தார்.

ஈரான் தூதர் அமிர் இரவானி, ‘பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர் இப்படி அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்துப் பேசுவது, இஸ்ரேல் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை பெருமையாகக் கருதுவதைக் காட்டுகிறது’ எனக் கூறினார்.