பிஎம் கிசான் திட்ட நிதியை இன்று விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி(பிஎம் – கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஎம் – கிசான் 15வது தவணை இன்று விடுவிக்கப்படுகிறது. இதன்மூலம், நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.16,800 கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு மூன்ற தவணையாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்கள் தங்களின் வாழ்வாதார இலக்குகளை அடைய உதவுவதற்கும் இந்த உதவி அளிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 70 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பிஎம் கிசான் நிதி விடுவிக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “15வது பிஎம் கிசான் நிதி இன்று விடுவிக்கப்படுகிறது. சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளன. ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களும், தெலங்கானாவில் தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்களுமே உள்ளன. இந்த சூழலில் பிஎம் கிசான் நிதி விடுவிக்கப்படுகிறது. தாமதப்படுத்தி நிதி விடுவிக்கப்படுவது உள்நோக்கம் அற்றதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.