ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கே பிரதான எதிர்க்கட்சியாக பாஜக இருக்கும் நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவ. 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு வரும் டிச. 7ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தான் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக ஆட்சிக்கு வந்தால் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 450 மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், 2.5 லட்சம் அரசு வேலைகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பாஜக தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். ராஜஸ்தான் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நட்டா, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க மாநிலத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் நட்டா உறுதியளித்தார்.
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் மீதான குற்றங்கள் குறித்த புகார்களை விசாரிக்க மகிளா டெஸ்க் தனியாக ஏற்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு ரூ. 2 லட்சம் மதப்புள்ள சேமிப்பு பத்திரம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதியளிக்கிறது. நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஏலத் தொகை குறித்த பாலிசியையும் பாஜக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிப் பைகள், புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ 1,200 உதவி வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, “மற்ற கட்சிகளுக்கு எல்லாம் தேர்தல் அறிக்கை என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. ஆனால், பாஜகவுக்கு அப்படியில்லை. இது வளர்ச்சிக்கான பாதை வரைபடம். எனவே இந்த தேர்தல் அறிக்கை (‘சங்கல்ப் பத்ரா’) என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. வரும் காலத்தில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான உறுதிமொழிகள். நாங்கள் இதுநாள் வரை எதைச் சொன்னோமோ அதைத் தான் செய்துள்ளோம். சிலர் காங்கிரஸும் பாஜகவும் ஒன்று என்கிறார்கள். ஆனால், அது அப்படியில்லை. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பல வேறுபாடுகள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே ஊழல், பெண்களை அவமரியாதை செய்வது விவசாயிகளைப் புறக்கணிப்பது தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். ஆனால், பாஜக அப்படியில்லை. மக்களுக்கு நல்லது செய்வதுதான் எங்கள் நோக்கம். நாட்டில் வேறு எந்தவொரு மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு ராஜஸ்தானில் தான் மின்சார விலை அதிகமாக இருக்கிறது. இங்கே தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வாட் வரி அதிகமாக உள்ளது. அதேபோல வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் ஊழல் புகாரும் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் ஊழல்வாதிகளுக்கு நல்ல பாடத்தைச் சொல்லித் தருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.