சேலம் பெரியார் பல்கலை விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் புறக்கணிப்பு!

சேலம் பெரியார் பல்கலை.யில் நவ.23-ல் நடக்கும் கருத்தரங்கு நிறைவு விழா அழைப்பிதழில் அமைச்சர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம், ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, திருப்பி அனுப்பி வைப்பது, பல்கலை விவகாரத்தில் தலையிடுவது உள்ளிட்ட தேவையில்லாத செயல்களில் ஆளுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 23 ஆம் தேதி ஜி 20 மாநாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வி துறை ஒப்புதல் இல்லாமல், அவர்களுக்கு தெரியாமலேயே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதனை நிறுத்திட வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழக நிறுவனர் கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்கலைக்கழக பெயரில் வெளியாகி உள்ள அழைப்புகளில் அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொறுப்பு அதிகாரி, இயக்குநர், பதிவாளர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மேலும், அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயர், உயர்கல்வித்துறை செயலாளர் பெயரும் இடம்பெறவில்லை. கருத்தரங்கத்தின் நிறைவு விழா நவ.23-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த செயல் தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிகழ்வு நடந்துள்ளது, மேலும் ஆளுநருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.