சங்கரய்யாவின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் தெரிவிக்காததற்கு வன்னி அரசு கண்டனம்!

சங்கரய்யாவின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் தெரிவிக்காததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகியான வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 102 வயதான என்.சங்கரய்யா, சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் கடந்த 13 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சங்கரய்யா. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி சங்கரய்யாவின் உயிர் பிரிந்தது. சங்கரய்யாவின் மறைவு செய்தியை கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். சங்கரய்யாவின் உடல் மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிற்பகலுக்கு பிறகு, சென்னை தியாகராயர் நகர் வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சங்கரய்யாவின் உடல் நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சங்கரய்யாவின் மறைவுக்கு தமிழக ஆளுநரான ஆர்.என் ரவி இரங்கல் தெரிவிக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,” நடிகருக்கும் அடிகளாருக்கும் இரங்கல் சொல்ல தெரிந்த ஆளுநருக்கு சுதந்திர போராட்ட தியாகியான தோழர் சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவிக்க மனமில்லை. அவ்வளவு வன்மத்தராக தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்.

கடந்த அக்டோபர் 24 ம் தேதி நடைப்பெற்ற மருது சகோதரர்கள் விழாவில் பங்கேற்ற ஆளுநர் திரு.ரவி அவர்கள் சுதந்திரப்போராட்ட தியாகிகளை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். அப்படிப்பட்ட ரவி தான் சுதந்திரப்போராட்ட வீரரும் தமிழ்நாட்டின் மூத்த இடதுசாரி இயக்கத்தலைவருமான தோழர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் அறிக்கை கூட தரவில்லை. ஆனால், சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக போலிக்கண்ணீர் வடிக்கிறார். இறப்புக்கு கூட இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது மானுடத்துக்கே இழிவு” என கடுமையாக சாடியுள்ளார்.