இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக பதவி வகித்தவர் எஸ் வெங்கிடரமணன். இவர் 1990 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். மேலும் 1985 ஆம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராகவும், கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மறைந்த வெங்கிடரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன். இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது ஆளுநராகவும், அதற்கு முன்பாக 1985-89 வரையில் ஒன்றிய நிதித் துறைச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர் வெங்கிடரமணன். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும் முன்னாள் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.