ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு தமிழ்நாட்டுக்கே எதிரானது என்றும், அவர் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்ட முன்வடிவுகளையும் ஏற்கவில்லை எனவும் பாமக எம்.எல்.ஏ ஜிகே மணி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய பாமக எம்.எல்.ஏ ஜிகே மணி கூறியதாவது:-
10 சட்ட முன் வடிவுகளை முதலமைச்சர் இங்கே சுட்டிக் காட்டினார்கள். அதில் 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவு கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. 12/2020 சட்டத்திருத்தமும் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும். எனவே கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 2 சட்டத் திருத்த முன்வடிவுகள், இந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 8 சட்ட முன்வடிவுகளை முதலமைச்சர் இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதனால், ஆளுநருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது. இது தமிழ்நாட்டின் நலன் கருதியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. ஆகவே ஆளுநர் முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இணக்கமாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இந்த சட்ட முன்வடிவுகள் பல்கலைக்கழகங்களை அதிகமாக சுட்டிக்காட்டி உள்ளது. பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனை சமாளிக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. பல்கலைக்கழகத்தை உருவாக்கியது மாநில அரசும் முதலமைச்சரும். ஆகவே இந்த நெருக்கடியான சூழலில் இந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் 200 வது பிரிவின்படி அவர் கட்டாயம் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. பேரவைத் தலைவர் இதை அறிவிப்பதற்கு முன்பாக நானும் அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த சட்ட வல்லுநர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநரின் போக்கு ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டுக்கு விரோதமானது என்றார்கள். ஒருவர் கூட ஏற்கவில்லை. நான் நடுநிலையோடு சொல்கிறேன். ஆளுநரின் போக்கு சட்டவிரோதமானது. தமிழ்நாட்டுக்கு எதிரானது.
இங்கு ஆளுங்கட்சி உள்ளது. எதிர்க்கட்சி உள்ளது. மற்ற கட்சிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழ்நாட்டு மக்களின் நலனின் அக்கறை கொண்டு நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இவை. இந்த சட்டத் திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்றால் இவர் தமிழ்நாட்டுக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவை முழு மனதோடு ஆளுநர் ஏற்க வேண்டும் என்று அரசியலமைப்பு சொல்கிறது. விளக்கம் தேவைப்பட்டால் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்ப வேண்டும். நிதித்துறை சார்ந்து பிரச்சனை இருந்தால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்றே சட்டம் சொல்கிறது. இதை மீறி ஆளுநர் செயல்படுவது தமிழ்நாடு நலனுக்கு உகந்ததாக இருக்காது. மேலும் ஒன்றை சொல்கிறோம். வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்தாலும் பிற மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். அவருக்கு மொழி பற்றி தெரியாது, இந்த மண்ணை பற்றி தெரியாது, மக்களை பற்றித் தெரியாது, பல்கலைக்கழகங்களை பற்றி தெரியாது. எதையோ செய்கிறார்கள். கடந்த ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா என்ற துணை வேந்தரை நியமித்தார்கள். எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டது? நீதிமன்றம் வரை சென்றது. இது தேவையா?. இவ்வாறு அவர் பேசினார்.