டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உரிய நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைவானதும், தீவிரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்காது என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயம் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களும் பதில் அளித்திருக்கிறார்கள். சமூக ஊடக நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை அவை எடுத்திருக்க வேண்டும். விரைவில் நாங்கள் சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். இன்னும் 3-4 நாட்களில் இந்தக் கூட்டம் நடக்கும். அப்போது, இந்தப் பிரச்சினையின் தீவிரம் அவர்களுக்கு உணர்த்தப்படும். டீப்ஃபேக் வீடியோக்களை தடுக்கவும், தங்கள் சேவைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அவர்கள் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மெட்டா, கூகுள் பேன்ற நிறுவனங்களும் அழைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நிச்சயமாக அழைக்கப்படும் என கூறினார். மேலும், “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மூலம் தற்போது சமூக ஊடக நிறுவனங்கள் பாதுகாப்பை பெற்று வருகின்றன. இதன் மூலம் அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்கள். ஆனால், அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால், அவர்கள் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பை தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது” என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப்பட்ட மிக மோசமான டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகைகள் இது குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர். செயற்கை நுண்ணறிவு செயலியைக் கொண்டு இவ்வாறு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் எச்சரித்தார். “இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறி இருந்தார். இந்த சட்டப்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.