“சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பின்னர் முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறுகையில், “சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது. கருத்து வேறுபாடு பல இருக்கலாம். வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இருக்கிறது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடாக இருப்பதாக நான் கருதுகிறேன். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது” என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”அப்போதெல்லாம் ஆளுநர் அரசுடன் பேசிதான், துணைவேந்தர்களை நியமிப்பார். ஆனால் இப்போது அப்படியல்ல. அதனால்தான் இதை தற்போது கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.
அதன் பிறகு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “கல்வி மாநில அரசின் பட்டியலிலும் இல்லை, மத்திய அரசின் பட்டியலிலும் இல்லை. அது பொதுப்பட்டியலில் இருக்கிறது. திமுக அரசு தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டே இருக்கிறது. மக்களுக்கான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. அதை மறைக்கதான் திமுக அரசு ஆளுநர் விடியத்தை கையில் எடுத்திருக்கிறது. மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது. மின் கட்டண உயர்வை கேட்டு, ஷாக் அடித்தே பலர் இறந்து விடுவார்கள் போலிருக்கிறது. வீட்டு வரி அதிக அளவில் கூடியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போது பட்டியலின மக்கள் மீது அதிக தாக்குதல் நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் மறைப்பதற்காக ஆளுநரைப் பற்றி பேசி வருகிறார்கள். ஆளுநரைப் பற்ற்றியும் மத்திய அரசைப் பற்றியும் உறுப்பினர்களைப் பேசவிட்டு அவை வேடிக்கை பார்க்கிறது. இது வேதனையானது” என்றார்.