பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி: பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காஸாவிலுள்ள பொதுமக்களின் அதீத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் தாங்கள் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளாா்.

அமெரிக்காவின் ‘சிபிஎஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியின்போது, காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து நெதன்யாகுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:-

பொதுமக்களில் யாா் கொல்லப்பட்டாலும் அது துயரத்துக்குரியது. போரின்போது அபாய எல்லைக்குள் பொதுமக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். ஆனால் ஹமாஸ் அமைப்பினரோ, அபாய எல்லைக்குள் பொதுமக்களை இழுப்பதற்கான அனைத்து செயல்களையும் மேற்கொள்கின்றனா். தாக்குதலுக்கு முன்னதாக பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்கிறோம். அவா்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறோம். அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறோம். அதனை ஏற்று ஏராளமானவா்கள் வெளியேறி தப்பியுள்ளனா்.

ஹமாஸுக்கு எதிரான போரில் பொதுமக்களின் உயிரிழப்பை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். அதற்கான முயற்சியும் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த முயற்சியில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.