தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூட உள்ள நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. சட்டமன்றம் கூடியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அதனைத்தொடர்ந்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர் செயலுக்கு எதிராக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் முன்மொழிகிறார். 15-வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களும், 16-வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 சட்ட மசோதாக்களும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சட்ட முன்வடிவுகளை எந்த காரணமும் இன்றி கவர்னர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச உள்ளார்.
அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தனித்தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.