பணியிடமாற்றத்திற்குப் பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்: சித்தராமையா

அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பரபர புகார் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு சித்தராமையா பதிலளித்துள்ளார்.

கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. சித்தாரமையா முதல்வராகப் பதவியேற்றார். அங்கே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது முதலே கர்நாடக அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துவிட்டன. தேசிய கட்சிகளுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சொன்ன குமாரசாமி, திடீரென பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். இதற்கிடையே கர்நாடகாவில் அரசு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசிய ஆடியோ இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் பணியிட மாற்றத்திற்குப் பணம் பெறுவது போன்ற இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதற்கிடையே இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. எடியூரப்பா முதல்வராக இருந்த அவரது மகன் விஜயேந்திராவை சூப்பர் சிஎம் என்று விமர்சித்தவர் சித்தராமையா என்று கூறியுள்ள ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, இப்போது யதீந்திராவின் செல்போன் பேச்சு யார் சூப்பர் சிஎம் என்பதைக் காட்டுவதாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்ற குமாரசாமி, இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே இந்த விவகாரத்திற்கு சித்தராமையா இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதிகாரிகள் பணியிடமாற்றத்திற்குப் பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்ற சித்தராமையா, குமாரசாமி முதல்வராக இருந்த போதுதான் இது எல்லாம் நடந்ததாகவும் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குமாரசாமி இப்படிதான் எதாவது சொல்லிக் கொண்டிருப்பார். இது குறித்துக் கேட்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவரது குற்றச்சாட்டிற்கு நான் ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன். குமாரசாமி எத்தனை முறை வேண்டுமானாலும் டுவீட் போடட்டும்.. அது குறித்து எனக்குக் கவலையில்லை. குமாரசாமி முதல்வராக இருந்த போது இடமாற்றத்திற்குப் பெற்ற பணம் குறித்து அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர்கள் ஆட்சியில் தான் பணம் வாங்கிக் கொண்டு டிரான்ஸ்ஃபர் போட்டார்கள். எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடப்பது இல்லை. நான் மீண்டும் சொல்கிறேன்.. ஒரே ஒரு பணியிட மாற்றத்திற்கு நான் பணம் வாங்கியதை நிரூபிக்கட்டும் நான் அரசியலில் இருந்தே முழுமையாக ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். அவர் நூறு முறை டுவீட் செய்யட்டும், இதற்கு மேல் நான் இதில் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

சித்தாரமையாவின் மகன் யதீந்திரா கடந்த 2018-23 வரை வருணா பகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்தாண்டு நடந்த தேர்தல் தனக்குக் கடைசி தேர்தல் என சித்தராமையா அறிவித்த நிலையில், தனது தந்தை சித்தராமையாவுக்காக தனது சொந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார். சித்தராமையா வருணா தொகுதியில் தான் சுமார் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரம் யதீந்திரா இந்த தேர்தலில் வேறு எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.