ராஜஸ்தானில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 200 தொகுதிகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 25-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இன்று சுரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்றைய பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் குறித்துதான் பேசப்படுகிறது. கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஒருங்கிணைந்து ரன்களை குவிப்பர். ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டிருக்கின்றனர் என விளாசினார்.

முன்னதாக பிரதமர் மோடியின் இந்த சுரு பொதுக் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசார் சென்று கொண்டிருந்தனர். போலீசார் சென்ற வாகனம் சுரு மாவட்டத்தில் லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 போலீசார் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். 6 போலீசார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.