ஆம் ஆத்மி அமைச்சரின் அறிக்கையை நிராகரித்த டெல்லி துணைநிலை ஆளுநர்!

பாம்னோலி நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் தனது மகனுக்கு சாதகமாக டெல்லி தலைமைச் செயலாளர் செயல்பட்டார் என்ற அமைச்சர் அதிஷியின் ஊழல் புகாரை பரிசீலனை செய்ய துணைநிலை ஆணையர் வி.கே சக்சேனா மறுத்திருக்கிறார். இதனை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைக் குறிப்பிட்டு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லி அமைச்சரால் (விஜிலென்ஸ்) சமர்ப்பிக்கப்பட்டு முதல்வரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புகார்களின் முதல்நிலை அறிக்கை எனக்கு கிடைத்தது. மிகவும் முக்கியமான விசாரணை தொடர்பான விவகாரங்களைப் பற்றிச் சொல்லும் எனது செயலகத்தின் ரகசிய உறையில் அளிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை ஆச்சரியமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. அந்த விவகாரத்தின் தகவல்கள் டிஜிட்டல் தரவுகளாக பொதுவெளியில் கிடைக்கின்றன. ஊடகங்களில் அதுகுறித்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விவகாரத்தின் அறிக்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விசாரணை அறிக்கை குற்றச்சாட்டுகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரு ஊடக விவாதத்தை உருவாக்கி இந்த முழுவிவகாரத்தை அரசியலாக்குவதை நோக்கமாகவே கொண்டுள்ளது.

தலைமைச் செயலாளர் மற்றும் கோட்ட ஆணையரின் பரிந்துரையின் பேரில் என்னுடைய ஒப்புதல் மூலம் ஏற்கனவே இந்த விவாகரம் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் உள்ளது. இதனால் எனது முன்னால் இருக்கும் இந்தப் பரிந்துரை பாரபட்சமானது, தகுதியற்றது என்பது எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தன்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என தலைமைச்செயலாளர் மறுத்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறை அமைச்சர் அதிஷி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அறிக்கை அளித்திருந்தார். அதில் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்காக ரூ.850 கோடி அளவில் நிலமோசடி ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மொத்தம் 670 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விரிவான விசாரணை அறிக்கையில், துவாரகா விரைவுச்சாலை திட்டத்துக்காக பாம்னோலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய நிலத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர் தனது மகன் தொடர்புடைய நிறுவனம் பயனடையும் வகையில் நிலத்தின் மதிப்பினை 22 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை துணைநிலை ஆளுநருக்கு கடந்த வாரம் புதன்கிழமை அனுப்பி வைத்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தலைமைச் செயலாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.