இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது: மாலத்தீவு

இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அதிபர் அலுவலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலாளர் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். அவர்களை திரும்ப அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் முகமது மூயிஸ் தொடங்கி உள்ளார். இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாலத்தீவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018 வரை அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தார். அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார், அதன் பின்னர் வந்த முகமது கோலி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இந்த சூழ்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக இருப்பார் என கருதப்படுகிறது.