உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாகச் சென்று அகிலேஷிடம் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் திமுக எம்.பி டிஆர் பாலு.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் “சமூக நீதிக் காவலர்” வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, வி.பி. சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட முடிவெடுக்கப்பட்டது. உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். விபி சிங் பிரதமராக இருந்தது வெறும் பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியவர் வி.பி.சிங். எனவே, நாடு முழுவதும் அரசியல் தலைவர்களாலும், மக்களாலும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் நவம்பர் 27ஆம் தேதி விபி சிங் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விபி சிங் சிலை திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டிஆர் பாலு, நேற்று அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.