உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 10-வது நாளாக இன்று மீட்புப் பணி தொடரும் நிலையில் பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
இதனையடுத்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-
உத்தரகாசியில் உள்ள சில்க்யாராவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் படம் முதன்முறையாக கிடைத்துள்ளது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை விரைவில் பத்திரமாக வெளிக்கொண்டுவர அனைத்தை முயற்சிகளையும் செய்து வருகிறோம். முதன்முறையாக, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமரா மூலம் பேசி நலம் விசாரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்தார். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இடிபாடுகளுக்குள் 6 அங்குல விட்டம் கொண்ட குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமராவின் உதவியுடன் தொழிலாளர் சகோதரர்களுடனான உரையாடல் மற்றும் அவர்களின் செயல்திறன் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களையும் பாதுகாப்பாக வெளிக்கொண்டு வருவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள நிலையில், அவர்கள் இருக்கும் பகுதி பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமராவின் உதவியுடன் அவர்கள் அனைவரும் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது முதன்முறையாக வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் வழியாக இதற்கு முன் திரவ வடிவில் மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு சூடான கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டு அதன் மூலம் மீட்புப் பணியில் இருந்த அதிகாரிகள் பேசி உள்ளனர். மேலும், தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் மொபைல் போன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.